திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சுக்கு ஆதரவு தெரிவித்து மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடற்கரை கிராமங்களான கூத்தங்குழி, தோமையார்புரம், இடிந்தகரை ஆகிய கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது,“மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வராமல் விடுபட்டுப் போனவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிந்த பிறகு கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். பெண்கள் நீங்கள் பேருந்தில் ஃப்ரீயா போகிறீர்கள், நாங்கள் காசு கொடுத்துப் போகிறோம். எங்குப் பார்த்தாலும் பெண்களுக்குத் தான் பெருமை.
எங்கள் ஊரில் மோடியைப் பற்றிப் பேசியவுடன் என் மீது வழக்குப் போட்டார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் அவதூறாகக் கூறினார்கள். அவ்வாறு கூறியவர்கள் மீது எத்தனை வழக்குகள் போடலாம்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஜவஹர்லால் நேரு உட்பட அனைவரும் பாடுபட்டார்கள். ஆனால், பாஜகவிற்கும் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சர்தார் படேல் மற்றும் காமராஜர் ஆகியோர் பற்றிப் பேச இவர்களுக்கு உரிமை இல்லை. பாஜகவின் ஒரே குறிக்கோள் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு சம்பந்தமும் இல்லாமல் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.
சிறுபான்மையினரைக் காக்கப் போகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மோடிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். எடப்பாடியும், பாஜகவும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இந்தியக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமையும். தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
சமீபத்தில் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, 300க்கும் மேற்பட்ட தேவாலயம் இடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவாலயங்களைக் காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி வெற்றி பெறக்கூடாது. ஆகவே, நீங்கள் அனைவரும் மறக்காமல் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், “கூடங்குளம் அணு உலை இங்கு வரக்கூடாது என போராடியவர் உதயகுமார். அதற்காகத் தனது வாழ்க்கையையே இழந்தவர். மக்களுக்காக வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்று வந்து அறக்கட்டளை நடத்தினார். அதையும் நிறுத்தி விட்டார்கள். பள்ளிக்கூடம் நடத்தினார் அதையும் நிறுத்தி விட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க:"விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்"- ஜாபர் சாதிக் வழக்கு குறித்து இயக்குநர் அமீர் விளக்கம்! - Director Ameer On Jaffer Sadiq Case