தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வகுப்பறையில் படிப்பது மட்டும் பாடம் இல்லை...” அன்பில் மகேஷ் கூறும் அறிவுரை என்ன? - MINISTER ANBIL MAHESH - MINISTER ANBIL MAHESH

MINISTER ANBIL MAHESH: வகுப்பறையில் படிப்பது மட்டும் பாடம் இல்லை, விளையாட்டு மைதானத்தில் சொல்லிக் கொடுப்பதும் பாடம் தான் என கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 4:37 PM IST

சென்னை:தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 10) திறக்கப்பட்டு, மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்குச் சென்றனர். இந்நிலையில், சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ் நிதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு பாட நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய காட்சி (Credit - ETVBharat TamilNadu)

அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

மேலும், பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆதார் பதிவு மற்றும் அஞ்சலக வங்கிக் கணக்கு எண் தொடங்கும் சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கிறது. முதலமைச்சர் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து, அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளார்” என தெரிவித்தார்.

பின்னர் மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “மாணவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையில் ஆசிரியர்கள், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும், பல சாதனையார்களை உருவாக்க வேண்டும். வர உள்ள கூட்டத்தொடரில் மாணவர்களுக்கு பல நல்ல புதிய அறிவிப்புகள் வரும். பெற்றோர் கஷ்டத்தை நீங்கள் உணர வேண்டும், நாம் நன்றியோடு இருக்க வேண்டும்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல சாதனைகளை நீங்கள் புரிய வேண்டும், முழுக் கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும். வகுப்பறையில் படிப்பது மட்டும் பாடம் இல்லை, விளையாட்டு மைதானத்தில் சொல்லிக் கொடுப்பதும் பாடம் தான்.

நேற்றைய தினம் கூட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 25 பள்ளி மாணவர்கள் லண்டனுக்குச் சென்றுள்ளனர். கடந்த ஆட்சியில் 6 மாதம் முதல் 11 மாத காலதாமதமாக தான் புத்தகங்கள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இரண்டு, மூன்று மாதங்கள் காலதாமதம் ஆனது. ஆனால், இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கும் பொழுதே மாணவர்களுக்கு பாட நோட்டுப் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வயதில் படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்தி படிக்க வேண்டும். படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் நன்றாக செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர், அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “பெரியார் பல்கலை துணை வேந்தர் முடிவுகள் எடுப்பதை தடுக்க வேண்டும்..” ஆட்சிக் குழுவிடம் வேண்டுகோள்! - Salem Periyar university

ABOUT THE AUTHOR

...view details