ராணிப்பேட்டை:மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் இங்கு சர்ப்ரைஸ் விசிட்டாகவே வந்துள்ளேன். இங்கு படிக்கும் மாணவர்கள் வெட்கம், கூச்சம், பயம் ஏதுமின்றி நம்பிக்கையுடன் படிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் கலை பண்பாட்டு துறையை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி, பாட்டிலும் கெட்டிக்காரர்களாக உள்ளனர் . இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது, அவர்கள் மாணவர்களுக்கு நன்றாக பாடம் நடத்துகின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க:எந்த அணையையும் தூர்வார முடியாது? - அமைச்சர் துரைமுருகன்!
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 44 ஆயிரத்து 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே 98.8% மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.