சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனியார் நிறுவனம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள 446 அரசு பள்ளியில் பயிலும் 3,511 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் தகுதியான 797 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ”அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்ற வகையில் செயல்படும் போது நீங்கள் தங்கள் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக உதவித்தொகை கொடுத்து உயர்த்தி உள்ளீர்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் முன்னிலையில் உள்ளதற்கு காரணம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக உயர்வுக்கு படி, கல்லூரிக்கு கள ஆய்வு, பெண்களுக்கான கல்விக்கு நிதியுதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் ’புதுமை பெண் திட்டம்’ மூலம் பயன் அடைந்துள்ளனர். கூடுதலாக 75 ஆயிரம் பெண்கள் பயனடைய உள்ளனர்” எனக் கூறினார்.