சென்னை:தமிழ்நாட்டில் 'நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி' (Namma School Namma Ooru Palli) திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்களிப்புடன், ரூ.464 கோடி மதிப்பில் 17 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (நவ.20) நடைபெற்றது. அதில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின் உறுப்பினர் செயலாளர் சுதன், யுனிசெஃப் இந்தியாவின் கல்வித் தலைவரான சாதனா பாண்டே ஆகியோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக NSNOP திட்டத்தின் மூலம் கூட்டுரவுகளை ஏற்படுத்துவது குறித்து அனைவரும் கலந்துரையாடினர்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்: இந்த திட்டம் கடந்த 2022 டிசம்பர் 19ஆம் தேதி முதலமைச்சரால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs), தனிநபர்கள் மற்றும் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகப் பங்களிக்கலாம். இதுவரை 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்களிப்புடன் ரூ.464 கோடி செலவில் 17,500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.