கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாணவர்களை தயார்படுத்துவது, உளவியல் ரீதியாக தயார்படுத்துவது போன்றவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, கொடுத்துட்டா போச்சு என்றார்.
ஏற்கனவே உள்ள ஆய்வுக் கூடங்களை நவீனமயமாக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களாக மாற்றுவதற்கான முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 11, 12ம் வகுப்புக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அந்த வசதி அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து! - மறுத்தேர்வு எப்போ தெரியுமா?
ஆய்வுக் கூட்டம் என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தேர்ச்சி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சாதனை புரிவதற்கு காரணம். இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது தான்.
ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2000 பள்ளிகளுக்கு யார் வேண்டுமானாலும் வந்து மாணவர்களின் கல்வித்திறனை சோதித்து பார்க்கலாம் என தலைமை ஆசிரியர்கள் சவால் விட்டுள்ளனர்.
எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் செல்ல இருக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு தனியார் சர்வே நிறுவனத்துடன் இணைந்து சர்வே எடுக்கிறார்கள். அது பெரும்பாலும் தவறுகளாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழக அரசு.
அனைத்து பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரவேண்டும் என்பதற்காக, ஒரு குழு உருவாக்கப்பட்டு அதற்கான யோசனைகள் போய் கொண்டிருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் கொண்டு வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஏனென்றால் உலக டிரெண்டிங்கில் என்ன இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல நாம் மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.