சென்னை:சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்களுக்கான, நவீனத் தொழில்நுட்பப் பயிற்சி என்னும் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “நூலகர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பம் வகையிலான பயிற்சி இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் வழங்கப்படவில்லை. வாசகர்களுக்கு தேவையான நூல்களை எளிதில் கிடைக்க செய்யும் வகையில் நூலகர்க்களை தயார்ப்படுத்தும் பயிற்சி இது.
நூலகத்தை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கின்றனரா என்பதை நூலகர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நூலகத்திற்கு வராத இளைஞர்களை நூலகத்திற்கு வரவைக்க வேண்டும். இந்த தொழில்நுட்ப பயிற்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில மகேஸ் பொய்யாமாெழி, “வெள்ளம் பாதித்த இடங்களில் ஜனவரி 2ஆம் முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு பொதுத் தேர்வு நடைபெறும். டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு அந்த மாவட்டங்களில் நிலைமை சீரானப் பின்னர், செயல்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.