சென்னை:பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப் புத்தகத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்தச் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே தற்போது பாடப் புத்தகத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, இதில் எந்த லாப நோக்கத்திற்காகவும் விலை உயர்த்தப்படவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு என்றுமே மாணவர்களின் நலன் நாடும் அரசாகவே செயல்படக் கூடியது. தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் 2015-16ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 –19ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, 11-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களான புவியியல் பாடப்புத்தகம் - 466 சதவிகிதம், வணிகவியல், புவியியல் பாடப்புத்தகம் - 325 சதவிகிதம், அரசியல் அறிவியல், புவியியல் பாடப்புத்தகம் - 300 சதவிகிதமும் என பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2013–14 ஆம் கல்வியாண்டிலும், பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுதும் குறிப்பிடத்தக்கது.