தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பொதுத்தேர்வை பதற்றம் இல்லாமல் எழுதுங்கள்" - மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அட்வைஸ்! - ANBIL MAHESH POYYAMOZHI

2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வைப் பதற்றம் இல்லாமல் எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தேர்வு எழுதும் மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ்
தேர்வு எழுதும் மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 2:20 PM IST

Updated : Oct 14, 2024, 4:24 PM IST

சென்னை: தமிழகத்தில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையைக் கோவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "பருவ மழையைப் பொறுத்தவரை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மழை பாதிப்பு இருந்தால் விடுமுறையா? இல்லையா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கின்றது. மாவட்டங்களில் மழை பாதிப்பு இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர், பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைத்து இருப்பார்கள், விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களே வெளியிடுவார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

பள்ளிக்கல்வித்துறை மீது இந்த அரசு அதிக அக்கறையுடன் இருக்கின்றது. இந்த துறைக்காக ரூ.44,042 கோடியை இந்த அரசு ஒதுக்கி இருக்கிறது. அட்டவணை வெளியிட்ட பின்பு அதற்கு ஏற்ப மாணவர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும். பொதுத் தேர்வைப் பதற்றம் இல்லாமல் எழுத வேண்டும். 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள்
பிப்.7 முதல் பிப்.14 வரை நடைபெறும், 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்.15 முதல் 21 வரை நடைபெறும், 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்.22 முதல் பிப்.28 ஆம் தேதி வரை நடைபெறும்.

இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா..? பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 3 முதல் 25 வரையும், 11ம் வகுப்புக்கு மார்ச் 5 முதல் மார்ச் 27 வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். பொதுத் தேர்வுகளுக்கான முடிவு 12ம் வகுப்புக்குமே 9ஆம் தேதியும், 11ம் வகுப்பு ரிசல்ட் மே 19ஆம் தேதியும், 10ம் வகுப்பு ரிசல்ட் மே 19ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு SSA திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய தொகையினை, ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. ஒன்றிய அரசு பல்வேறு காரணங்களைச் சொல்லி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தக்கூடாது என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அந்த முயற்சி கைவிடப்படவில்லை. 27 வகையான நடவடிக்கைகள் SSA நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுத்தப்படுவதால் இது தொடர்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது என்றார்.

திடீரென அந்தப் பணத்தில் மத்திய அரசு கை வைக்கின்றனர் என கூறிய அவர், மத்திய அரசின் 20 விதிமுறைகளை முறையாக பின்பற்றும் மாநிலம் தமிழகம் எனவும், பிற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டாக இருக்கின்றது எனத் தெரிவித்தார். சிறப்பாகச் செயல்படும் தமிழகத்திற்கு SSA நிதி வரவிடாமல் ஒன்றிய அரசு தடுக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அதிக நிதியினை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்கின்றார்.

சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, பேராசிரியர் அன்பழகன் திட்டம்மூலம் 3,500 வகுப்பறைகள் வரை கட்டப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் இடங்களில் கட்டடங்கள் கட்டப்படும், மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து படிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம், அதே வேளையில் சிதிலமடைந்த கட்டடத்திலும் மாணவர்கள் படிக்கக் கூடாது என உறுதியாக இருக்கின்றோம். சிறப்பாக செயல்படும் மாநிலமாகத் தமிழகம் இருக்கும் பொது, மும்மொழி கொள்கையினை ஏற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 14, 2024, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details