ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 18ஆம் தேதி வரை, திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பெயரில் நாடாளுமன்ற பரப்புரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு தொகுதிக்கான பரப்புரை கூட்டம் ஆணைக்கல்பாளையத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் பாஜக எப்படியெல்லாம் வஞ்சித்தது, அதற்கு துணையாக அதிமுக எப்படி செயல்பட்டது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. நாட்டின் ஜனநாயகத்தின் வேரில் வெந்நீர் பாய்ச்சிய பாஜகவிற்கு, தமிழ்நாடு மக்கள் நாடாளுமன்றத் தேர்தல் வாயிலாக பாடம் கற்பிக்க வேண்டும். பாஜகவைச் சேர்ந்த மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோரால் நாள்தோறும் திமுக பற்றி பேசமால் தூங்க முடியவில்லை. பாஜகவின் ஆயுதமாக வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை இருக்கிறது.
வரும் காலங்களில் தேர்தல் இருக்குமா இருக்காதா, ஜனநாயகம் நீடிக்குமா நீடிக்காதா, மாநிலத்தின் உரிமைகள் நிலை நாட்ட முடியுமா முடியாதா என்பதை நிலை நாட்டத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. பிரதமர் மோடி மாநிலங்கள்தோறும் சென்று கோயில் மட்டும் திறந்து வைத்து வருகிறார். டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், பிரதமர் மோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பளமும், விவசாயிகளுக்கு முள்படுக்கையும் விரிக்கிறார்.