நீலகிரி:உதகை அருகே உள்ள மரவியல் பூங்கா பகுதியில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 30 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 30 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 13) காலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென மண்சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (22) மற்றும் ஜாகீர் (25) ஆகியோர் மண்ணில் புதைந்தனர். இதனை அறிந்த மற்ற பணியாளர்கள், உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண்ணில் புதைந்த கூலித் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியை, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உதகை நகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கட்டுமானப் பணிக்கு முறையான அனுமதி பெறாமல், இப்பணி நடைபெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.