தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்த வழக்கை உடனே விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடுமா?" - கோபமடைந்த நீதிபதி!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில் குமாருக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 3:58 PM IST

சென்னை:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற வழக்கை, விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில் குமாரின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.11 ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. ஆனால், இந்த வழக்கு இன்று பட்டியிலப்படாத நிலையில், மனுதாரர் தரப்பில் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு முறையிடப்பட்டது.

அப்போது, பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா? என்பது குறித்து கேட்டுத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கை பட்டியலிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனக் கூறினார். ஆனால், மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், 'நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இல்லையென்றால் அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும்?' எனக் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, 'இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது' எனக்கூறிய நீதிபதி, 'அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம்'எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: குப்பையில் வீசப்பட்ட மனுக்கள்.. சேலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details