சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ். சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1887 - 88 ஆவணங்களில் சத்ய ஞான சபைக்கு 107.20 ஏக்கர் நிலமும், 1919ஆம் ஆண்டு வருவாய் ஆவணங்களில் 107.08 ஏக்கர் நிலமும், 1995ஆம் ஆண்டு வருவாய் ஆவணங்களில் 105.62 ஏக்கர் நிலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சபாநாத ஒளி சிவாச்சாரியார் பெயருக்கு மாற்றப்பட்ட சில நிலங்களின் பட்டா மாறுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிலங்களை சட்ட விரோதமாக பட்டா மாறுதல் செய்து வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.