தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவர் விடுதலையும் செல்லாது; செப்.9 முதல் மீண்டும் விசாரணை.. அமைச்சர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - Madras High court

TN Ministers case verdict: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 10:47 AM IST

சென்னை:அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கு: கடந்த திமுக ஆட்சி காலத்தில் 2006-ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆ தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உட்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணை நடத்தினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை பதில்:இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், வழக்கில் புதிய ஆவணங்கள் இல்லாதபோது வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்திக்கு உரிமை உள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கினாலும் தொடர் விசாரணையில் தான் ஒருவர் குற்றவாளியா? இல்லையா? என்பது தெரியவரும். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆதாரம் இல்லை என தெரியவந்தால் அவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவிக்கலாம். புகார் அளிக்கப்பட்டதற்காக மட்டுமே ஒருவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த கூடாது. புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை அமைப்பு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: அதேபோல் கடந்த 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு 74 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துரை வழக்கு பதிவு செய்தது. கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து தீர்ப்பை மறு ஆய்வு செய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்தார். இந்த வழக்கில் தங்கம் தென்னரசு சார்பில், ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். எனினும், ஆதாரங்களைப் புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வதை நியாயமான விசாரணையாகக் கருத முடியாது.

வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும். மேல் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு முழு அதிகாரிமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதில்:மேல் விசாரணையில் அமைச்சருக்கு எதிராக எந்த ஆவணங்களும் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். காரணங்கள் சரியாக இருந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

விசாரணை அதிகாரியிடம் நீதிபதி விசாரணை: தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரியான பூமிநாதனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதில், எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஏழு ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார். திமுக ஆட்சியில் தங்கம் தென்னரசுவை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், ஆட்சி மாற்றத்துக்கு பின் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லலை என சரமாரியாக கேள்விகளை எழுப்பி கடந்த ஜூன் 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு:இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு வழக்குகளிலும் இன்று (ஆக.7) காலை தீர்ப்பளித்தார். அதில், "அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தார். சிறப்பு நீதிமன்றம் ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாமல் இயந்திரத்தனமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தினமும் விசாரணை என்ற அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தவும் சிறப்பு நீதிமன்றத்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் போது அமைச்சர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

ABOUT THE AUTHOR

...view details