சென்னை:கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்தால் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரணை செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று(பிப் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி: அப்போது நீதிபதி, ஊழல் தடுப்புச் சட்ட வழக்கு பிரிவு 15-ன் கீழ், விடுதலை செய்ய அதிகாரம் உள்ளதா? ஐ. பெரியசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பில் இருந்து ஐ.பெரியசாமி வழக்கு எவ்வாறு மாறுபட்டது? கீழமை நீதிமன்றம் ஆவணங்களை ஏன் உரிய முறையில் ஆய்வு செய்யவில்லை என பதிலளிக்கும் படி ஐ.பெரியசாமிக்கு கேள்வி எழுப்பினார்.