சென்னை: திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மாதவிடாய் நாட்களில் பணிக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாலும், மாதவிடாய் என்பது நோய் அல்ல என்பதால் அதற்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் பீகார் மாநிலத்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், கேரளா மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பும் வழங்கப்படுகிறது என்பதை அந்த மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார். மலையாள தொலைக்காட்சி உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களிலும் விடுப்பு வழங்கப்படுவதால், தமிழகத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்கக் கோரிய தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், முன்னதாக மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை வகுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகும்படி அந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மாதவிடாய் நாட்களில் மாணவிகளுக்கும், பணியில் உள்ள பெண்களுக்கும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் விடுப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமென என தெளிவுபடுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!