சென்னை: அரியலூர் தாலுகா பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் என்பவரது தாத்தாவுக்கு அதே கிராமத்தில் 1.12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை அரசு வழங்கியது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்ற பட்டியலின மக்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த பஞ்சமி நிலத்தை காமராஜின் தாத்தா, கடந்த 1963ல் பட்டியலினத்தை சேராத பெருமாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
கடந்த 2009 முதல் 2021 வரை பல்வேறு கட்டங்களில் இந்த நிலத்திற்கு விற்பனை ஒப்பந்தங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் இந்த விற்பனை ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரியும், பஞ்சமி நிலத்தை மீட்க கோரியும், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு காமராஜ் மனு அனுப்பினார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது மனுவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி, “பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பட்டியலினம் சாராத பிரிவினருக்கு விற்பனை ஒப்பந்தம் செய்தது சட்டவிரோதமான செயலாகும். இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதை கண்காணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர். இந்த நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு பலர் இந்த இடத்தில் வீடுகளையும் கட்டியுள்ளனர்.
சமீபத்தில் தான் இந்த விபரம் மனுதாரருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் கடந்த 2022ல் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ள ஆவணங்களின் படி மனுதாரர் குறிப்பிடும் நிலம் பஞ்சமி நிலம் என்பது தெளிவாகிறது. பட்டியலினத்தவர்களுக்காக வகைப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை வேறு சமூக மக்கள் பயன்படுத்த முடியாது.
இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரம் இல்லை. எனவே, மனுதாரர் குறிப்பிட்டுள்ள பஞ்சமி நிலத்தை பயன்படுத்தி வரும் நபர்களிடம் இருந்து மீட்டு, அந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் அந்த நிலத்தை வருவாய் பதிவேடு ஆவணங்களில் பஞ்சமி நிலம் என்று பதிவு செய்து, தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியலின மக்களுக்கு சுமார் 12 இலட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1 இலட்சத்து 26 ஆயிரத்து 133 ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இதில் சுமார் 933 ஏக்கர் நிலங்கள் மீட்கபட்ட நிலையில், மேலும் 4 ஆயிரத்து 431 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கனிமவள நிறுவனங்களிடம் ராயல்டி வரி வசூலிக்கத் தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?