சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) கடந்த 2016ஆம் ஆண்டு குருப்-1 தேர்வுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வினை எழுதிய ராம்குமார் என்பவர் தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளினை மாற்றி வைத்து முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்.
மேலும் அவருக்கு உதவியதாக அவரிடம் பணியாற்றிய கருணாநிதி என்பவரும், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் சிலர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது இந்த வழக்கினை ரத்து செய்யக் கோரி கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், விடைத்தாள் மாற்றி வைத்த விவகாரத்தில் தான் ஈடுபடவில்லை என்றும், முறையாக விசாரணை நடத்தாமல் ராம்குமாரிடம் வேலை பார்த்த தன் மீது காவல்துறை தவறாக வழக்குப்பதிவு செய்திருப்பதால், இது தொடர்பான கீழமை நீதிமன்ற வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் முனைவர் சி.இ பிரதாப் ஆஜராகி, கடந்த 2016-ல் நடைப்பெற்ற டிஎன்பிஎஸ்சி குருப் - 1 தேர்வில் விடைத்தாள் மாற்றி வைத்து மோசடி செய்த வழக்கில் இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு அதில் 10 பேரிடம் சாட்சி விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நடத்தி முடித்துள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க கூடாது எனவும் வாதத்தை முன் வைத்தார். தொடர்ந்து, அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வில் விடைத்தாள் மாற்றி மோசடி செய்தது தொடர்பான வழக்கை 6 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்த வழக்கறிஞர்.. போலீஸூக்கு கெடு - ஐகோர்ட் அதிரடி!