தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அரசு அறிவித்த அனைத்து சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை எஸ்டேட் கோப்புப்படம்
மாஞ்சோலை எஸ்டேட் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

சென்னை:மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்த அனைத்து சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, பிபிடிசி எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வகித்து வந்தது. ஆனால், கடந்த 2018-ல் 8 ஆயிரத்து 374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசு அறிவித்தது.

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம்:

இதனையடுத்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, பிபிடிசி நிறுவனம் அறிவித்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் தரப்பிலும், புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுக்களில், "மறுவாழ்விற்காக உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் 'டான் டீ' தேயிலைத் தோட்டக் கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும், தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:வைரல் வீடியோ: கழுத்தளவு தண்ணீர்; பாகுபலி பட பாணியில் குழந்தையை மீட்ட இளைஞர்!

தற்போது மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணையிலிருந்த இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மாஞ்சோலை வழக்கு விசாரணை:

முன்னதாக அந்த விசாரணையின் போது அரசு தரப்பில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், 'பாரம்பரிய வனவாசி' என்ற வரையறையின் கீழ் இடம் பெறமாட்டார்கள் என்றும், புலம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது" என்றும் தெரிவித்தார். அதற்கு, தேயிலைத் தோட்டத்தை அரசின் டான்டீ நிறுவனம் கையகப்படுத்துவது சாத்தியமில்லை என்றும், ஏற்கனவே, டான் டீ நஷ்டத்தில் உள்ளதாகவும் அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்டதை, வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது என்பதாலும், மனிதாபிமான அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வணிகக் கடன் வழங்குவதுடன், வீட்டு மனை, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் வீடுகள் உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்திருப்பதாகவும், தொழிலாளர்களுக்கு மணிமுத்தாறில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேற தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதி காப்புக்காடு மற்றும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பாடுகளை தொடர இயலாது. இது, அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு நன்றாக தெரியும் எனவும், அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதால், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு நிறுவனம் இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:"உரிமைகளை பேசும் மக்கள், கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை" - நீதிபதி ஆதங்கம்!

அதையடுத்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், ஊழியர்களை விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில் வற்புறுத்தி கையெழுத்துப் பெற்றுள்ளதாகவும், கையெழுத்திடவில்லை என்றால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு:

தேயிலையைத் தவிர ஏலக்காய் உள்ளிட்ட பிற விவசாயப் பொருட்களைப் பயிரிடுவதால், 'பாரம்பரிய வனவாசி' என்ற வரையறையின் கீழ், தோட்டத் தொழிலாளர்கள் வருவார்கள் என்றும், 4 தலைமுறைகளாக மாஞ்சோலையில் வாழ்ந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளில் சிறப்பு அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், அரசு தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளையும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details