தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வராயன் மலை சாலையை சீர் செய்து பேருந்துகள் இயக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலை மக்களின் அவசர தேவைகளுக்காக ஏற்கனவே பழுதான 32 கி.மீ சாலையை சரிசெய்து தற்காலிக போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 4:05 PM IST

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும், அந்தப் பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்.22) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் நேரில் ஆஐராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து அரசு தார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, போக்குவரத்து வசதிக்கான சாலை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் 6 மாதங்களில் சாலைப்பணிகள் முடிந்து பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக, 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க :தீவுத் திடலில் கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு கடை.. டெண்டர் மற்றும் கடை வாடகை விவரம்!

பின்னர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகி, வெள்ளிமலை - சின்ன திருப்பதி வரையான 32.74 கிமீ சாலைகள் அமைக்க ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு 2017ம் ஆண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சரி செய்து பேருந்துகளை விடலாம் என தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய சாலைகள் அமைப்பதற்கான பணிகளை தனியாக தொடங்கலாம். மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல ஏதுவாக குறைந்தபட்ச போக்குவரத்து வசதிகளை தற்காலிகமாக வழங்க வேண்டும்.

வெள்ளிமலை - சின்ன திருப்பதி வரை ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை சரி செய்து தற்காலிகமாக பேருந்துகளை இயக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை 4 வாரத்தில் தொடங்க வேண்டும் என சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details