சென்னை:அதிமுகமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் முனிச்சாலையில், கடந்தாண்டு மே மாதம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக, மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், செல்லூர் ராஜூ மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் செல்லூர் ராஜூ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (மார்ச் 12) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செல்லூர் ராஜூ தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:கோவை தொகுதியில் களமிறங்கும் அண்ணாமலை.. பாஜகவின் பக்கா பிளான்!