மதுரை:தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நவம்பர் 2022ஆம் ஆண்டு காதலன் தனியாகச் சந்திக்க வேண்டும் என காதலியை அழைத்துள்ளார். அதையடுத்து, நவம்பர் 13ஆம் தேதி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேசியதாகவும், அப்போது காதலன் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பெற்றோரிடம் தனது காதலை தெரிவித்த காதலி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வலியுறுத்தியுள்ளார். ஆனால், காதலன் திருமணம் செய்ய மறுத்ததுடன், தொடர்ந்து நேரில் சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால், தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை காதலித்து பாலியல் தொல்லை அளித்ததாக காதலி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாலியல் தொல்லை அளித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கு ஶ்ரீவைகுண்டம் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.