மதுரை: திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான் திருச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்த கனரா வங்கியில் சுமார் 1.7 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தேன். இந்த நிலையில், நான் கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறி மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் கனரா வங்கி நிர்வாகத்தினர் பொய்யான தகவல்களை கொடுத்து பல்வேறு உத்தரவுகளை பெற்று எனது சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளனர். எனவே, இந்த ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறியிருந்தார்.
இதேபோல், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்பிற்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தங்களது வாகனம், வீடு, சொத்துக்கள் போன்றவற்றை ஏலம் விடுவதாக அறிவித்து வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணை வந்தபோது, இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் (DRT) சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆனால், "மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் அலுவலர் இல்லாததால் பல வழக்குகளில் மனுதாரர்களை கேரளா எர்ணாகுளம் கடன் மீட்பு தீர்ப்பாயம் சென்று நிவாரணம் தேடிக்கொள்ளலாம்" என கூறப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.