மதுரை:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மீதான பாலியல் வழக்கில், ஏற்கனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் மனுத் தாக்கல் செய்யக் காரணம் என்ன? எனவும், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை பின்னர் எப்படி முன்ஜாமீன் வழங்க முடியும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் ராமகிருஷ்ணன் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் மீது மதுரையில் உள்ள பிரபல தனியார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் வெண்ணிலா என்பவர் மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், "பதிவாளர் ராமகிருஷ்ணன் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக பணிபுரிந்த போது, பணி நிமித்தமாக அவரை சந்தித்தேன்.
அப்போது என்னை இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசினார் என்றும், தன்னை சென்னைக்கு தனியாக வரவேண்டும் என்றும், தனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் கல்வித்துறையில் உயர்ந்த பதவிகளை வாங்கித் தருகிறேன் என்றும், தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து தனக்கே அனுப்பினார் என்றும், அதனைக் கண்டித்ததால் சிலரை வைத்து என்னை மிரட்டுகிறார்" எனவும் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் என் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். பொய்யாக என் மீது புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கக் கூடிய நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுவேன்' என குறிப்பிட்டுள்ளார்.