சென்னை:தமிழ்நாட்டில் கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாகப் பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படும் வரை நிர்வாக பணிகளைக் கவனிக்கத் தக்கார்கள் நியமித்துள்ளதாகவும், பல கோயில்களில் இது போன்ற நியமனங்கள் உள்ளது. இது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது.
அவ்வாறு நியமிக்கப்படும் தக்கார் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்டோராக இருக்கின்றார். இவ்வாறு நியமிக்க இந்து அறநிலையத் துறை சட்டத்தில் இடமில்லை. கோயிலை நிர்வகிக்க அறங்காவலர் தான் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தக்கார்களை அறநிலையத்துறை நியமிப்பது சட்டவிரோதம். மேலும், அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார் பட்டியலைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்கக் கூடாது" உள்ளிட்ட கோரிக்கைகளைத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த 7 மனுக்களும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாரயண பிரசாத் அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, "எனது மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் வழக்கின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் செலுத்திய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, "மனுவை இன்னும் அனுமதிக்கவில்லை எதிர் தரப்பில் பதில் அளிக்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளைத் தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தனது நேர்மை தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப அளிக்க முடியும்" என தெரிவித்த நீதிபதிகள், தற்போதைக்கு பணத்தைத் திரும்ப அளிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க:ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ பாஸ் கட்டாயம் - உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!