சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி டிச.23ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். அதற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளித்துள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக காவல்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நேற்று (டிச.27) உத்தரவிட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது அரசு தரப்பில், "எப்.ஐ.ஆர் (FIR) எப்படி கசிந்தது? ஒரே குற்றவாளி என ஆணையர் எந்த அடிப்படையில் தெரிவித்தார்? என நீதிமன்றத்தில் விளக்க தாயாராக இருக்கிறோம் என தெரிக்கப்பட்டது. மேலும், புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர் தன்னிச்சையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் எப்படி எப்.ஐ.ஆர் கசிந்தது என சைபர் கிரைம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும், எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,"யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும், ஏன் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக கசிந்தது என அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும். புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு, இத்தனை மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கேள்வி எழுப்பினர்.
"மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கும் போது, காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் கசியவில்லை என அரசு எப்படி உறுதியாக கூற முடியும். புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது" எனவும் தெரிவித்தனர்.
யார் அந்த 'சார்' :
"இவ்வழக்கில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏரோப்லேன் (Airplane Mode) ஆப்சனில் ஞானசேகரன் தனது செல்போனை வைத்திருந்துள்ளார். அதனால், செல்போன் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை ஆணையர், முதற்கட்ட விசாரணையில் ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். ஆனால், தொடர் விசாரணையில் தான் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தெரிய வரும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி:
அரசு ஊழியர்கள் விதிகளின் படி, காவல் ஆணையர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க முடியுமா? சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க ஆணையர் பத்திரிகையாளர்களை சந்திக்க உரிமை உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பு விளக்கம்:
ஏரோப்லேன் ஆப்சனில் இருந்ததால், அழைப்புகளை கண்காணிப்பதில் சிரமம் உள்ளது. வேறு யார் அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்தார்கள் என்ற தகவல், செல்போன் நிறுவனங்களிடம் கேட்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல் ஆணையர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர்களை ஆணையர் சந்திக்க கூடாது என விதிகள் ஏதும் இல்லை. சம்பவத்துக்கு பிறகு மாணவர்களை அமைதிப்படுத்தவே ஆணையர் இந்த விளக்கத்தை அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைகழகம் தரப்பு வாதம்:
பல்கலைக்கழகம் வரும் எல்லாரையும் சரிபார்ப்பது முடியாத காரியம். காவலர்கள் காரணம் கேட்டு மட்டும் உள்ளே கேட்டு அனுப்பி விடுவார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.