சென்னை: பாளையங்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில், முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கி, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதினாலும் இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு - ஐகோர்ட் உத்தரவு!
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்பும், தகுந்த காரணங்களைக் கூறாமல் தமிழக ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? என அதிருப்தி தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்த கோப்புகளைத் தமிழக அரசு 8 வாரத்திற்குள் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.