சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, அதை அரசுடமையாக்கி கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகையாக 69 கோடி ரூபாயை வைப்பு தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.
இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36 கோடியே 87 லட்ச ரூபாயை வசூலிக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்க கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வருவதாகவும், கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு மக்கள் வரி பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு என தெரிவித்து இருந்தார்.