சென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த ஜூலை 20ஆம் தேதி இறைத்தூதரான நபிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி அவதூறாக கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக கோவை சாய்பாபா காவல் துறையினர் மணிகண்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மணிகண்டன் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவு வெளியிட்டது உறுதியாவதாகக் கூறி ஆகஸ்ட் 5ஆம் தேதி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மணிகண்டன் மனுத் தாக்கல் செய்தார். அதில், நண்பரின் பதிவை தவறுதலாக பகிர்ந்ததாகவும், தவறு என தெரிந்ததும் உடனடியாக பதிவை நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.