சென்னை: கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பசுக்களைத் தனிநபர்களுக்கு வழங்கத் தடை விதிக்கக் கோரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளைப் பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கோயில்களில் கால்நடைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் பிரசாத் அமர்வில் இன்று (ஏப்.3) விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள், தனிநபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது எனவும், பால் கொடுப்பதை நிறுத்திய இந்த பசுக்கள் அடிமாடுகளாக விற்கப்பட்டு உள்ளதாகவும், இது சம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அர்ச்சகர்கள், பூசாரிகள், சுய உதவிக் குழுக்கள், கோ சாலைகளுக்கு வழங்கப்படுவதாக விளக்கமளித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தானமாகப் பெற்ற பசுக்களைக் கோயில்கள் தான் பராமரிக்க வேண்டும். தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அவர்களிடம் தான் இருக்கின்றனவா? என யார் கண்காணிப்பர் எனக் கேள்வி எழுப்பினார்.
தானமாக வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், அவை சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். ஆனால் எந்த சுய உதவிக்குழுக்களிடமும் அந்த பசுக்கள் இல்லை என மனுதாரர் ரங்கராஜன் தெரிவித்தார். இதையடுத்து, ஒவ்வொரு கோயிலும் எத்தனை பசுக்களைத் தானமாகப் பெறலாம் என வரம்பு நிர்ணயிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட பசுக்களில் எத்தனை சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம்; திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Aarudhra Gold Trading Case