சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தற்போது, அந்த தடையை உறுதி செய்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு மாற்றாக, பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து அரசின் நிலைபாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு, இன்று (ஜன.31) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, "தமிழ்நாட்டில் 45 முதல் 85 சதவிகிதம் வரை பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல் உள்ள ஆலயங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தடை விதிப்பது குறித்து, பல துறைகள் சம்மந்தப்பட்டுள்ளதால், முழுமையாக தடை விதிக்க முடியவில்லை. அதனால், ஒரே துறைக்கு தடை விதிக்கும் வகையில், அதிகாரம் வழங்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 5 உற்பத்தியாளர்களிடம் இருந்து மாதம் 240 டன் அளவு பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் திட்டமும் அரசிடம் உள்ளது. பாட்டிலில் விற்பனை செய்வது தொடர்பாக டெண்டர் அறிவித்து பணிகள் தொடங்க 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.