புதுடெல்லி/சென்னை:பெஞ்சல் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண உதவி வழங்கப்படாத நிலையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1554.99 கோடி நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பெஞ்சல் புயல் பாதிப்பு:வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
குறிப்பாக இப்புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
மத்திய குழு ஆய்வு:இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வருகை தந்த மத்திய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான இக்குழுவில், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி துறை இயக்குநர் ஆர்.சரவணன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.