சேலம்:தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி ஆகும். மேலும் அதிகபட்ச கொள்ளளவு 93.47 டிஎம்சி அடியாகும். இந்த அணையானது சேலம் மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்லாது ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதரமாகவும் விளங்கி வருகிறது.
மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் கடந்த மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 39.65 அடியாகக் குறைந்து அதலபாதாளத்திற்கு சென்றது. நீர் இருப்பும் 11.91 டிஎம்சியாக இருந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம்:இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் கபினி அணை நிரம்பியது.