சேலம்:டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, நாட்டுக்காக அர்பணிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவு பெற்று 91வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நாளில் அணை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
மேட்டூர் அணை வரலாறு:கர்நாடகாவின் குடகு மாவட்டம் தலைக் காவிரியில் உருவாகும் காவிரியாறு 20க்கும் மேற்பட்ட துணை ஆறுகளுடன் கலந்து அகன்ற காவிரியாக உருவாகி கர்நாடகா மற்றும் தமிழகத்தில் 748 கிலோ மீட்டர் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன. அதைத் தடுக்க காவிரி குறுக்கே அணைகட்ட அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்கான ஆய்வு 1834ஆம் ஆண்டு முதல் 1924ஆம் ஆண்டு வரை வரை 90 ஆண்டுகள் நடந்தன.
அணை கட்டுமானம்:ஆங்கிலேய அரசின் கண்காணிப்பு வடிவமைப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ், நிர்வாகப் பொறியாளர் வெங்கட்ராமன் ஐயர், முதன்மை தலைமைப் பொறியாளர் முல்லிங்கி அடங்கிய 24 பொறியாளர்கள் குழுவினருடன் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 9 ஆண்டுகள் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து, மேட்டூர் அணை கடந்த 1934ஆம் ஆண்டு ஜூலை 14 கடைசியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதற்கு 4.80 கோடி ரூபாய் செலவானது. இதைத் தொடர்ந்து, 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் சென்னை கர்னலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி, அணையை முதன் முறையாக திறந்து வைத்தார். இதன் நினைவாக அணைக்கு ஸ்டேன்லி அணை என பெயர் சூட்டப்பட்டது.
பாசன வசதி:அணைக்கட்டுமானப் பணி முடிந்த நிலையில் இதுவரை 1947, 1999, 2015 ஆண்டுகளில் அணையின் மேற்கு பகுதியில் மின்னல் தாக்கியது, எனினும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் சேலம் மட்டுமல்லாது கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். நடப்பு ஆண்டு கடந்த ஜூலை 30ஆம் தேதி மேட்டூர் அணையானது, அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது.
இன்றைய அணை நிலவரம்:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாகவும், நீர் இருப்பு 93.08 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் வினாடிக்கு 12,500 கன அடியிலிருந்து 8,563 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க:70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை.. கடந்த வந்த பாதை!