தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. எல்.முருகன் துவக்கி வைக்கிறார்! - THOOTHUKUDI TO METTUPALAYAM TRAIN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 4:51 PM IST

Thoothukudi Mettupalayam Train: மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாளை முதல் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த 2 ரயில்களின் போக்குவரத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் விரைவு ரயில் சேவையானது (16766), தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

அதேபோல், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாரம் இருமுறை சிறப்பு ரயில் சேவை (16765) மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

இந்த புதிய ரயிலின் வழக்கமான சேவை வருகிற 20ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து துவங்குகிறது. இருந்தபோதிலும், இதன் துவக்க விழா நாளை (ஜூலை 19) காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது. இதனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உ.பியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!

ABOUT THE AUTHOR

...view details