சென்னை:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரீமால் புயலின் தாக்கத்தால் சற்று குறைந்த வெயிலும் குளிர்ந்த வானிலையும் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழைப் பொழிவும், காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையும் நிலவியது.
இந்நிலையில் நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை அதாவது அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாளையிலிருந்து வரும் 4ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைபொழிவு:திருப்பத்தூர் மாவட்டம் தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலா 4 செ.மீ வரை மழைப் பதிவாகியுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் 1 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் அம்முண்டி பகுதியில் 1 செ.மீ மழையும் , விரிஞ்சிபுரம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :புதுவை மற்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில், இயல்பை விட 2-1 டிகிரி வெப்பநிலை அதிகமாக காணப்பட்ட நிலையில், அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது வட தமிழக உள் மாவட்டங்களில் 34–43 டிகிரி வெப்ப நிலையும், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37° – 40 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வட தமிழக தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 32° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° – 26° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்களின் 37°–40° டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக மீனம்பாக்கத்தில் 41.9° டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 40. 1° டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் இதர பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை காணப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த ஏழு நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 41 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு : 31.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாட்கள்: 01.06.2024:தமிழகத்தில் ஒருசில இடங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 02.06.2024:அன்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 03.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.