சென்னை:மதுரவாயல் முதல் பெங்களூரு வரை சென்று மெத்தபெட்டமைன் விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து 40 கிராம் மெத்தபெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இதை ஒழிக்க போதைத் தடுப்பு காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை விற்பனை செய்யும் நபர்களையும் காவல்துறை கைது செய்துவருகிறது.
மேலும், போதை பொருள் புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் (ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், மதுரவாயில் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், மதுரவாயல் மேம்பாலம் அருகே காவல்துறையினர் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர் கண்காணிப்பில், மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் 'மெத்தபெட்டமைன்' போதை பொருள் விற்பனை.. ஒன்பது பேர் கைது..!
மூன்று பேர் கைது:
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சோமங்கர் (37) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டுவைச் சேர்ந்த அய்யப்பன் (26) என்பவரை அரக்கோணம் அருகே, உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, பெங்களூர் சென்ற தனிப்படை காவல்துறையினர், கேரளா மாநிலத்தை சேர்ந்த சமீர் (37) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை செய்ததில், அவர்கள் மதுரவாயல் முதல் பெங்களூரு வரை சென்று மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்த மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 40 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற கோணத்தில், போதைத் தடுப்பு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில், இதே வழக்கில் போதைத் தடுப்பு காவலர்கள் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து நினைவுகூரத்தக்கது.