சென்னை: மே 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 16.4 சென்டிமீட்டர். ஆனால், 25.9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதன்படி, இயல்பிலிருந்து கூடுதலாக 58 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
இந்த 7 நாட்களில் இந்தியாவில் 13.3 சென்டிமீட்டர் மழை பதிவாக வேண்டும். ஆனால், 14.1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இவை இந்தியாவின் ஒட்டுமொத்தமாக இயல்பிலிருந்து 6 சதவீதம் கூடுதலாகும். இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கேரளாவின் சில மாவட்டங்களுக்கும் வரும் 18, 19, 20 ஆகிய நாட்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 18ஆம் தேதி மல்லபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 19ஆம் தேதி இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 20ஆம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் மத்திய மற்றும் தென் மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
எனவே, இன்றிலிருந்து வரும் 20ஆம் தேதி வரை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“என்னைப் பற்றி பிறர் பேசுவதில் நான் கவனம் செலுத்துவதில்லை” - இளையராஜா! - Ilayaraja Vs Vairamuthu