சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இயக்குனர் தினகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெளிநாட்டில் உள்ள தனியார் அருங்காட்சியகங்கள், தனி விற்பனையாளர்கள் நடத்தும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வடக்கு மண்டல சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில், உலோகத்தாலான சோமாஸ்கந்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்காணித்துள்ளார்.
மேலும், இந்த சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலைச் சேர்ந்தது என்று அருங்காட்சியகம் நடத்துபவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்ததும், இதன் காலம் கி.பி.1500 முதல் 1600க்கு உட்பட்ட வெண்கலத்தால் ஆனது என்றும் குறிப்புகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது, அந்த சிலையின் பீடத்தின் முன் பகுதியில் தெலுங்கு மொழியில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததும், அதில் இந்த சிலையானது காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்காகச் செய்யப்பட்டது எனவும், இந்த சிலையை தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடராமநாயனி என்பவரால் கோயிலுக்கு கொடுக்கப்பட்டிருப்பதும் எழுதப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.