தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அடுத்த தலைமுறை இருக்குமா?" டங்ஸ்டன் திட்டத்தில் மதுரை மேலூர் மக்கள் வேதனை! - TUNGSTEN MINING ISSUE

மேலூர் பகுதியை பண்பாட்டு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். டங்ஸ்டன் திட்டத்தால் உணவுக்கு திண்டாடும் நிலையும், அடுத்த தலைமுறையை பாதிக்கும் நிலையும் எற்படும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலூர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி,  ஜீவா, தங்கம் அடைக்கண்
மேலூர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி, ஜீவா, தங்கம் அடைக்கண் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2024, 1:11 PM IST

மதுரை: டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல‌ அறிவிப்பை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, ஜனவரி 7ம் தேதி ஒரு லட்சம் பேருடன் பேரணியாகச் சென்று, மதுரை தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, புலிப்பட்டி, வல்லாளபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏலத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அதரவு தெரிவித்தனர்.

மேலூர் பகுதி மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

இதனையடுத்து, மத்திய அரசு டங்ஸ்டன் தற்காலிகமாக ஏல அறிவிப்பை ஒத்திவைத்தது. தொடர்ந்து, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் கனிம சுரங்கம் அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்ததியுள்ளது.

இந்நிலையில், மேலூர் பகுதியை பண்பாட்டு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், எங்கள் மண்ணை ஒருபோதும் யாருக்கும் விட்டுத்தர நாங்கள் தயாராக இல்லை என மேலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தின் ஒரு பகுதி (ETV Bharat Tamil Nadu)

இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 25-ஆம் தேதி மேலூரில் நடைபெற்ற பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் கூட்டத்தில், வருகிற 2025 ஜனவரி 7-ஆம் தேதி ஒரு லட்சம் பேருடன் பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளத்திலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வரலாறு, பாரம்பரிய பெருமை கொண்ட அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைப்பதா?-மத்திய அரசுக்கு தொல்லியல் அறிஞர்கள் கண்டனம் !

இந்த நிலையில், அப்பகுதி மக்களின் மனநிலை குறித்து ஈடிவி பாரத் ஊடகம் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. அப்போது, சின்ன கற்பூரம்பட்டியைச் சேர்ந்த தங்கம் அடைக்கண் கூறுகையில், "கடந்த மாதம் 7-ஆம் தேதியிலிருந்து மேலூர் பகுதி மக்கள் வாழ்வியல் பதட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். சாதாரணமான வாழ்க்கையை எங்களால் வாழ இயலவில்லை. தமிழக அரசு சட்டமன்றத்தில் டங்ஸ்டனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும், மத்திய அரசு சாதகமான பதிலை அளிக்கவில்லை.

ரத்து செய்ய வேண்டும்:

டங்ஸ்டன் ஏல அறிவிப்பை ரத்து செய்வார்கள் என எதிர்பார்த்திருந்த எங்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதனால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். 5 ஆயிரம் ஏக்கர் மட்டுமன்றி, மேலும் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் பயன்படுத்த தயாராக உள்ள நிலையை, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இப்பகுதி விவசாயம் மற்றும் பண்பாடு சார்ந்ததாகும். எனவே, இதை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு வேளாண் மண்டலமாக இதனை அறிவிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்தும், கேசம்பட்டி ஜீவா கூறுகையில், “ஏரி, குளங்கள், விவசாயம், பல்லுயிர் என கிராமங்கள் அனைத்தையும் அழிப்பதற்கான கூறுகள் டங்ஸ்டன் அழிவுத் திட்டங்களில் உண்டு. பல கி.மீ. அளவுக்கு பூமியைத் தோண்டி, சுரங்கம் அமைப்பதால் நிலத்தடி நீரின் பாழ்பட்டுவிடும். காற்று, நீர், ஒலி மாசு என அனைத்தும் நிகழும். இதன் தொடர்ச்சியாக வேளாண்மை அழிவைச் சந்திக்கும்.

உணவுக்கு திண்டாடும் நிலை?

பல சுரங்கங்களை அமைத்த சீனா போன்ற நாடுகளே இந்த முயற்சியைக் கைவிடத் தொடங்கியுள்ளன. நாட்டின் வளர்ச்சி, வல்லரசு, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களைக் கூறுவது ஏற்க முடியாது. உணவின்றி நாம் எதுவும் செய்ய முடியாது. இலங்கை போன்ற நாடுகள் உணவுக்குப் படும் திண்டாட்டத்தையும், அதனால் ஆட்சியே தள்ளாடும் நிலையையும் பார்க்கிறோம். அந்த நிலைமை இந்தியாவுக்கும் வர வேண்டுமா?

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தின் ஒரு பகுதி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: ஏல அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு!

தற்போதே இந்தியாவில் 28 விழுக்காடு மக்கள் உணவுக்கு பாடுபாடும் நிலை உள்ளது. அரிட்டபாட்டி மட்டுமன்றி, அதன் தொடர்ச்சியாக உள்ள பெருமாள் மலை, அழகர்கோவில் மலை உள்ளிட்ட பாறைக்குன்றுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குன்றுகளின் அரசி என மதுரையைச் சொல்லலாம். உலகிலேயே மிகவும் பழமையான நகரான மதுரையின் மேலூர் பகுதியை பண்பாட்டு வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்” என்றார்.

அடுத்த தலைமுறை இருக்குமா?

அதனைத்தொடர்ந்து, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி கூறுகையில், “ 500 ஏக்கர் நிலங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்ற இடங்களில் சுரங்கம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ள ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ஏற்கமுடியாது. இவ்விடங்களைச் சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இதனால் பாதிப்பிற்கு ஆளாவர். பறவைகள், விலங்குகள், விவசாயம் என அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

எனவே, மதுரை மாவட்டத்திற்கே இந்தத் திட்டம் வேண்டாம். அடுத்த தலைமுறை இருக்குமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details