சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளில் அரசு மருத்துவமனையில் படிப்பவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முதுகலைப் படிப்புகளில் 27 பாடப்பிரிவுகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், முதுகலை படிப்புகளில் சில பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், முதுகலை பட்டப் படிப்புகளான எம்டி, எம்ஸ் பாடப்பிரிவில் 2024-25ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், எலும்பியல், மயக்கவியல், நெஞ்சக மருத்துவம் (chest medicine), கதிரியக்கவியல் மருத்துவம், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம். பிற துறைகளில் ஒரு வருடத்திற்கு சேர முடியாது.
அடுத்த கல்வியாண்டிற்கான சூழ்நிலையின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலளார் ரவீந்திரநாத் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறும்போது, "அரசு மருத்துவர்கள் விருப்பம் சார்ந்து முதுகலை மருத்துவப் படிப்புகளை தெரிவு செய்து படிக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துள்ளது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
ரவீந்திரநாத் (Credits - ETV Bharat Tamil Nadu) ஒருபுறம், முதுகலை மருத்துவ மாணவர்கள் கட்டாயமாக மூன்று மாதங்கள் தங்கள் படிப்பின் பொழுதே மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பையே பறித்துவிட்டது. மறுபுறம், அரசு மருத்துவர்களின் முதுகலை மருத்துவப் படிப்பு கனவுகளை தகர்த்திட முயல்கிறது. இது நியாமா?
மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது என மத்திய அரசை எதிர்த்துப் போராடும் மாநில அரசு, வேலைவாய்ப்புகளை அழித்தல் என்ற மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஒத்துழைக்கலாமா? நீட் தேர்வை விட கொடுமையானது அரசு மருத்துவர்களின் முதுகலை மருத்துவப் படிப்பு கனவுகளை தகர்ப்பது" என தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறும்போது, "தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து பல்வேறு முக்கிய படிப்புகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 30 துறைகளில் எம்டி, எம்எஸ் முதுகலை மருத்துவப் படிப்புகள் உள்ளன.
இவற்றில் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் போக மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. இவற்றில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு (Service Quota) வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
பெருமாள் பிள்ளை (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இனிமேல் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுகலை படிப்புகள் மட்டும் தான் இடம் பெறும். அதில், ஒன்றை தான் தேர்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து கிட்டதட்ட 20 துறைகளின் படிப்புகளை எடுத்து விட்டனர். இந்த படிப்புகளை படிக்கும் அரசு மருத்துவர்களுக்கு பணியாற்ற போதிய இடங்கள் இல்லை என்கின்றனர். இந்த படிப்புகளை இனிமேல் அரசு மருத்துவர்கள் படிக்க வேண்டுமென்றால் பொது கலந்தாய்வில் பங்கேற்று தான் படிக்க முடியும்.
இது மிகவும் சிரமமாக இருப்பது மட்டுமன்றி எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் தட்டுப்பாடும் ஏற்படும். அரசு மருத்துவர்கள் பணியில் சேரும் போது 2, 3 ஆண்டுகள் கிராமப் புறங்களிலும், மலை வாழ் பகுதிகளிலும் மிகுந்த சிரமத்துக்கு இடையே பணியாற்றி அதன்பிறகு தான் தேர்வு எழுதி முதுகலை படிப்புக்கு வருகின்றனர்.
இன்று கிராமப்புற மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றால் மருத்துவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு தான் காரணம். அதற்கான அங்கீகாரத்தை அரசு தர மறுப்பது வேதனையாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர் பணியிடம் உருவாக்கப்படவில்லை.
அதேப் போல, மொத்தமுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய கல்லூரிகளில் பல துறைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எனவே, கூடுதலாக மருத்துவப் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு அனைத்து சிறப்பு மருத்துவச் சேவையும் எளிதாக கிடைப்பது மட்டுமன்றி, மருத்துவர்களும் பயன்பெறுவர்.
அதை விடுத்து பல துறைகளில் முதுகலை மருத்துவப் படிப்பு முடித்து விட்டு வரும் மருத்துவர்களுக்கு பணியிடம் இல்லை என்று காரணம் கூறி, சர்வீஸ் கோட்டாவை ரத்து செய்வது உண்மையில் மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். அரசு மருத்துவர்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் முதுகலை மருத்துவப் படிப்பில் தரப்பட்ட இட ஒதுக்கீடு உரிமையை தற்போதைய திமுக அரசு பறிக்கிறது. இதை மருத்துவ சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.
தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட மிக வலுவாக இருக்கிறதென்றால், அதற்கான முக்கிய பங்கு சர்வீஸ் கோட்டாவுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியிருக்கையில், நம் சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், அரசின் இந்த செயல் அதற்கு எதிர்மறையாக உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை" என தெரிவித்தார்.
முன்னதாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, 15 வகையான படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. போராடிப் பெற்ற அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்ட திமுக அரசு சதித் திட்டம் தீட்டுகிறதோ என்ற ஐயம் எழுகிறது” என தெரிவித்திருந்திருந்தார்.
இதையும் படிங்க:திமுக ஆட்சியின் வெற்றி ரகசியம் இதுதான்.. தருமபுரியில் முதலமைச்சர் பேச்சு! - Makkaludan Mudhalvar