சென்னை: கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியிலிருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் தாக்கினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார், அவர் மீது 127(2),115(2),118(1),121(2),109,351 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது கத்தியால் குத்திய விவகாரத்தில் புதிய திருப்பமாக, கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் மோசஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். தன் மீது அவதூறு பரப்பி வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மருத்துவர் ஜேக்கின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: "குடிப்பழக்கத்தால் விக்னேஷ் உயிரிழப்பு".. கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் விளக்கம்
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், "சமீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய விக்னேஷின் தாயார் பிரேமா கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு தன்னை அணுகி மருத்துவ ஆலோசனைகள் பெற்றார்.
மூன்று முறை மட்டுமே தன்னை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்து மருந்துகளை எடுத்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக தான் கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு தான் பரிந்துரை செய்த நிலையில், கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கொடுத்த மருந்தினால் நிலைமை மேலும் மோசமானதாக தான் தெரிவித்ததாக ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.
ஆனால் அவ்வாறு தான் ஏதும் தெரிவிக்காத நிலையில், தன்னை பற்றி தவறாக ஊடகங்களில் செய்தி பரப்பிய விக்னேஷின் தாயார் பிரேமா, பிரேமாவின் இரண்டாவது மகன் லோகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.