புதுக்கோட்டை:நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமைந்துள்ள திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு திருச்சி நாடாளுமன்ற மக்களைவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது காங்கிரஸ், மதிமுக உட்பட கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "இன்னும் இரண்டு தினங்களில் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறேன் என்பது அறிவிக்கப்படும். அவ்வாறு, புதிதாக ஒதுக்கப்படும் சின்னத்தை 24 மணி நேரத்திற்குள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தில் இது சாத்தியமான ஒன்று.
மேலும், வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் சின்னம் முக்கியம் கிடையாது. அந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் எனக்கு கிடைத்துள்ளது. மதிமுகவிற்கு மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், எங்களுடன் கூட்டணியில் இல்லாத நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பாஜகவை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் மறுக்கப்படுகிறது.