சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கக்கூடிய எம்பிபிஎஸ், பி.டி.எஸ்., இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 21ஆம் தேதி துவங்கியது. எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,971 இடங்களுக்கும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களுக்கும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 91 இடங்களுக்கும் என 3,992 இடங்களிலும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 3,302 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 433 இடங்களில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அதேபோல் பிடிஎஸ் படிப்பில் சென்னை புதுக்கோட்டை கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 195 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,790 இடங்களும் நிரப்ப அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7,568 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,786 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:துணை முதல்வர் டூ விஜய் அரசியல்.. இரண்டுக்கும் பளிச்சுனு பதில் சொன்ன உதயநிதி!
மேலும், தெலுங்கு மைனாரிட்டி கல்லூரியில் 7 பிடிஎஸ் இடங்களும், 321 என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 2ம் சுற்றுக் கலந்தாய்விற்கு செப்டம்பர் 11ந் தேதி முதல் 13 ந் தேதி வரையில் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏற்கனவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்களை தேர்வு செய்தவர்கள் வேறுக் கல்லூரியில் சேர்வதற்கும், புதியதாக இடங்களை தேர்வு செய்யவும் பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து 14ந் தேதி முதல் 16ந் தேதி வரையில் விரும்பும் கல்லூரி மற்றும் பாடத்தையும் பதிவு செய்யலாம். அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 18ந் தேதி வெளியிடப்பட்டு, 19ந் தேதி இறுதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.