மயிலாடுதுறை:இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1 டன் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சாதனை படைத்துள்ளளார். இது அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு டன் காரை தலைகீழாக இழுக்கும் இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu) மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் அப்பு என்ற தினகரன் (27). கார் ஓட்டுநரான இவர், சிறுவயது முதலே யோகா மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்து வந்துள்ளார்.
அதன் பிறகு யோகாவின் மூலமாக போதை மற்றும் மதுப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணினார். இதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த அவர், முதலில் சிரசாசனத்தை கற்றுக் கொண்டுள்ளார். ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் 'சிரசாசனம்' கற்றுக் கொண்ட அப்பு, அதன் பிறகு தலைகீழாக நடக்க பழகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு தலைகீழாக காரை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டதற்குப் பலனாக, இன்று செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளி சாலையில் சுமார் ஒரு டன் (1,000 கிலோ) எடையுள்ள காரை இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஒன்றுமே தெரியாதது போன்று நின்றிருந்த அப்பு, ரெடி ஸ்டார்ட் என்றதும் காரை இழுக்கத் தொடங்கிவிட்டார். சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு தலைகீழாக நடந்து கொண்டே காரை இழுத்துச்சென்றார். அவரை சக நண்பர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பின்னர் போதைப்பொருள், மதுபானம் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாகும் இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து, இளைஞர் அப்பு என்ற தினகரன் கூறுகையில், "நான் இளம் வயதிலிருந்து முறைப்படி யோகா உடற்பயிற்சி உள்ளிட்டவற்றைச் செய்து வந்துள்ளேன். அதன் பிறகு இந்த யோகாசனம் மூலம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன்.
இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தவிர்த்து விளையாட்டிலும் தங்களது உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வருவதால் தான் என்னால் 1 டன் எடை கொண்ட காரை என்னால் தலைகீழாக இழுக்க முடிந்தது. இன்னும் வரும் காலங்களில் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிக்ழ்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"விதைகளை பாதுகாக்காமல் வேளாண்மையை எப்படி காப்பாற்ற முடியும்?" - விவசாயிகள் ஆதங்கம்!