மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி' சார்பில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை, ஒரே மேடையில் அரங்கேற்றிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 45 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று 2 மணி நேரத்தில் நடனங்களை அரங்கேற்றினர்.
இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கதக் மற்றும் ஒடிசா மாநிலத்தின் ஒடிசி ஆகிய இரண்டு நடனங்களை மட்டும் அம்மாநில கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். மற்ற அனைத்து மாநில நாட்டியங்களையும் மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவர்கள் அரங்கேற்றினர்.
மாணவர்கள் நடனமாடிய காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu) கடைசி நடனமாக தமிழ்நாட்டின் பரத நாட்டியம் நிகழ்ச்சி முடிந்தவுடன், நிறைவாக அனைத்து மாநில நடனங்களையும் ஆடிய நாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் கூடி தேசியக் கொடியை ஏந்தியவாறு நிற்க, 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருப்பொருளை வலியுறுத்தினர்.
அப்போது தமிழின் சிறப்பை விளக்கும் வகையில் 'செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடல் பின்னணியில் ஒலிபரப்பப்பட்டது. 'இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்டு ரெக்கார்டு' என்ற அமைப்பு இதனை உலக சாதனையாக பதிவு செய்தது. இந்த நிகழ்ச்சியை, மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளியின் குரு உமாமகேஸ்வரி கல்யாண் ஒருங்கிணைத்தார்.
இந்தியாவின் பாரம்பரிய நடனம்:இந்த நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஃப் நடனம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கதக் நடனம், ஒடிசா மாநிலத்தின் ஒடிசி நடனம், மேற்கு வங்காளம் மாநிலத்தின் ச்சாவு நடனம், பஞ்சாப் மாநிலத்தின் பாந்த்ரா நடனம், இமாச்சலா பிரதேச மாநிலத்தின் நாட்டி நடனம், உத்தரகண்ட் மாநிலத்தின் சோளியா நடனம், தெலங்கானா மாநிலத்தின் தாந்தாரி நடனம், மணிப்பூர் மாநிலத்தின் மணிப்பூரி நடம், ஹரியானா மாநிலத்தின் சாங் நடனம், ராஜஸ்தான் மாநிலத்தின் கூமார் நடனம்,
குஜராத் மாநிலத்தின் கர்பா நடனம், பீகார் மாநிலத்தின் பிடிசியா நடனம், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் மார்டோ ச்சம் நடனம், சத்தீஸ்கர் மாநிலத்தின் கர்மா நாச் நடனம், கோவா மாநிலத்தின் தேக்கினி நடனம், கேரள மாநிலத்தின் மோகினி ஆட்டம், நாகாலாந்து மாநிலத்தின் சாங் லு நடனம், அசாம் மாநிலத்தின் பீகூ நடனம், மத்திய பிரதேசம் மாநிலத்தின் மான்ச் நடனம்,
ஆந்திரப் பிரதேசத்தின் குச்சிப்புடி நாட்டியம், திரிபுரா மாநிலத்தின் கோசா கிரி நடனம், மேகாலயா மாநிலத்தின் லாகூ நடனம், சிக்கிம் மாநிலத்தின் சிங்கிசாம் நடனம், கர்நாடகா மாநிலத்தின் டோலு புனிதா நடனம், ஜார்கண்ட் மாநிலத்தின் பாய்க்கா நடனம், மகாராஷ்டிரா மாநிலத்தின் லாவிணி நடனம் மற்றும் தமிழ்நாட்டின் பரதநாட்டியம் ஆகிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து சாதனை படைத்த மாணவிகளுக்கு நாட்டியப்பள்ளி ஆசிரியர் உமாமகேஸ்வரி கல்யாண் மற்றும் எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
இதையும் படிங்க:காவடி - வேல் காம்பினேஷனில் பரதநாட்டியம்.. கம்பத்தில் மாணவிகள் சாதனை!