தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நாளையுடன் முடிவு பெற உள்ள நிலையில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களாகவே, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இன்று கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, பட்டு கைத்தறி நெசவாளர் ஒருவரின் இல்லத்தில், பட்டுச் சேலை நெசவு செய்து வாக்கு சேகரித்தார். மேலும், தான் நெசவாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவதாக உறுதியளித்தார். அதன் பின்னர் சாலையில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பெண்கள் பலர் மலர்கள் தூவியும், ஆர்த்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை வழங்கினர்.