தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீறும் கடல் அலைகள்! மயிலாடுதுறையில் கனமழை! மீண்டும் மீண்டுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம்
தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை கடலோர கிராம மீனவர்கள் யாரும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் கடல் அலை (ETV Bharat Tamil Nadu)

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்டா மற்றும் கடலோர மாவட்டமான மயிலாடுதுறையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி இன்று (டிசம்பர் 11) காலை வரையில் மழை பெய்தது.

காலை 8.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறையில் 10 மி.மீ, மணல்மேடு 4 மி.மீ, சீர்காழி 14.80 மி.மீ, கொள்ளிடம் 3 மி.மீ, தரங்கம்பாடி 22 மி.மீ, செம்பனார்கோவில் 22.80 மி.மீ. எனச் சராசரியாக 12.93 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் (ETV Bharat Tamil Nadu)

இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீண்டும் கரைக்குத் திரும்பும்படியும் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் கடல் அலை (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:'3 கோடி ரூபாய் கொடு, இல்லையெனில் செத்து விடு' - பெங்களூரு சுபாஷ் தற்கொலையின் பின்னணி..!

இதனால், இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னூர் பேட்டை, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, சந்திரபாடி, சின்னங்குடி, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 28 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 400 விசைப்படகுகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

காசிமேடு கடற்பகுதி (ETV Bharat Tamil Nadu)

அதேபோல், இன்று சென்னையிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் வடசென்னைக்குட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details