மயிலாடுதுறை: கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக உதயமானது. கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக ஏ.பி.மகாபாரதி பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வரும் ஏ.பி.மகாபாரதி, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற போஷன் பக்வாடா - 2024 ஊட்டச்சத்து நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ஆட்சியர் மகாபாரதி, நேற்று (ஜூன் 26) மதியம் முகாம் அலுவலகம் சென்ற நிலையில், நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் இன்று (ஜூன் 27) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து அடைப்புகள் சரி செய்யப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரம் அதிரடி நீக்கம்.. காரணம் என்ன? - Agoram removed from bjp in charge