மயிலாடுதுறை:மயிலாடுதுறைக்கு அருகே கல்லணையையும், பூம்புகாரையும் இணைக்கும் சாலையில் சோழம்பேட்டை என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிராமி அம்மன் திருகோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் கடைசியாக 2001ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
23 ஆண்டுகளாக நடத்தப்படாத கும்பாபிஷேகம்:அதனைத் தொடர்ந்து, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்க முதல் பணியான பாலாலயம் எனப்படும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்காக கோயிலின் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டது.
மேலும், வேத மந்திரங்கள் ஓத, கோயிலில் உள்ள அம்மன் சிலைக்கு மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடங்களில் பூஜைக்கு வைத்த புனித நீரை எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், கோயில் வளாகத்தில் பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டு, கும்பாபிஷேகத்திற்கான பணி தொடங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.